Tamil News Channel

அதிகரித்து வரும் சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள்..!

‘கிறிஸலைஸ்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் ஆதரவுடன், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிக்க ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைககு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டியத்தின் இறுதிநாள் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (10.12.2024) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை எந்தத் தளத்தில் நிகழ்ந்தாலும் முறைப்பாடுகளைச் செய்ய முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஆளுநர், அது தொடர்பான பரந்துபட்ட விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அரச திணைக்களங்களில் நடைபெறும் பால்நிலை வன்முறைகள் தொடர்பில் பெண்கள் முறைப்பாடு செய்தாலும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்போது அதனை மீளப்பெறும் தன்மை இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அவ்வாறு செய்வதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அனுபவப் பகிர்வை வெளிப்படுத்திய முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர் திருமதி கலைச்செல்வியை வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில் பாராட்டினார். அரச அலுவலகங்களிலும், பொதுப்போக்குவரத்திலும் அவருக்கு நேர்ந்த பால்நிலை வன்முறை தொடர்பில் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்து, நடவடிக்கைக்கு உந்துதலாக இருந்தமை போன்று ஏனைய பெண்களும் செயற்பட வேண்டும் என ஆளுநர் கோரினார்.

தற்போதைய காலத்தில் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இரண்டாவது திருமணத்தை செய்து கொள்ளும் பெண்கள், தமது முதலாவது கணவரது பிள்ளைகளை துன்புறுத்துவதாகக் குறிப்பிட்டார். இவ்வாறான சம்பவங்கள் துடைத்தெறியப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

எமது சமூகத்தின் பண்பாட்டு முறைமை இன்று தலைகீழாகிச் செல்வதாகவும் மிருகங்களை விட மிக மோசமாக சில மனிதர்கள் நடந்து கொள்வதாகவும் ஆளுநர் வேதனையை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த செயற்பாட்டாளர்களால் தயாரிக்கப்பட்ட மனுவும் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *