அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு — ட்ரம்பின் கனவு கலைந்தது!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்திருந்த அமைதிக்கான நோபல் பரிசு இன்று (10) அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறி, தனக்கே இந்த விருது வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பாகிஸ்தான், இஸ்ரேல், ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் உள்ளிட்ட பல நாடுகளும் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தன.
காசா போருக்குத் தீர்வு காணும் நோக்கில் நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலும், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தினார்.
எனினும், நோபல் குழு வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளை ஊக்குவித்ததற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கான அமைதியான மாற்றத்தை முன்னெடுத்ததற்காகவும் மரியா கொரினா மச்சோடாவை தேர்வு செய்துள்ளது.
இதனுடன், நோபல் பரிசுக்காகக் காத்திருந்த ட்ரம்பின் கனவு நொறுங்கியதாக கூறப்படுகிறது.
வரலாற்றில் இதுவரை நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் — தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா — மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் ட்ரம்ப் இணைவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
![]()