ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பில் வரலாற்றில் முதல்முறையாக அதிகபடியான 14 ஆசிய நாடுகள் பங்கேற்ற 13வது ஆசிய வலைபந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்திய சிங்கப்பூர் நான்காவது தடவையாக சம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்தியாவின் பெங்களுரில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான குறித்த தொடர் நேற்று (27) நிறைவுக்குவந்தது.
இதில் குழு A யில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி தோல்வியடையாத ஒரே அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அரையிறுதியில் ஹொங்காங்கை 71 – 47 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை இறுதிப்போட்டியில் நேற்று சிங்கப்பூரை எதிர்கொண்டது.
மிகவும் பரபரப்புக்கு மத்தியில் இரு பலம்வாய்ந்த அணிகள் மோதிய இப்போட்டியின் முதல் 4 பாதி ஆட்டங்களும் நிறைவில் போட்டி 52 – 52 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையடைந்தது.
அதன் படி வெற்றியாளரை தீர்மானிக்க மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
அதில் முதல் பாதியில் 59 – 59 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன.
இதுவரையில் நடைபெற்றுள்ள தொடர்களில் இலங்கை அணி 6 தடவைகளும், சிங்கப்பூர் அணி 4 தடவைகளும், மலேசியா இரு தடவைகளும், ஹொங்காங் ஒரு தடவையும் சம்பியன் பட்டம் வென்றுள்ளன.
இலங்கை அணி 5 தடவைகள் ரன்னர்ஸ்-அப் பட்டம் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.