இந்த ஆண்டு இறுதியில் பங்களாதேஷில் ஆரம்பமாக உள்ள T 20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று ஆரம்பமாகியது.
23 போட்டிகள் கொண்ட இந்த போட்டியில் இலங்கையுடன் சேர்த்து 10 அணிகள் விளையாடுகின்றன.
இப்பத்து அணிகளையும் இரு அணிகளாக பிரித்து போட்டிகள் நடைபெறுகின்றன.
இதன் கீழ் இலங்கையின் முதலாவது போட்டி நேற்று தாய்லாந்துக்கு எதிராக நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற ஏனைய 3 போட்டிகளிலும் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வனுவாடு ஆகிய அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.
நாளை இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டிகளில் உகண்டா மற்றும் ஐக்கிய அமெரிக்கா அணிகளும் வனுவாடு மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும் மோதவுள்ளன.
நாளைய தினம் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ள போட்டிகளில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிம்பாப்வே அணிகளும் இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும் மோதவுள்ளன.
ஆரம்பச் சுற்று ஆட்டங்களின் முடிவில் அந்தந்த குழுக்களில் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் இரு அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெறும்.
தற்போது A குழுவில் முதலாவது நிலையில் ஸ்கொட்லாந்து மற்றும் இரண்டாவது நிலையில் இலங்கை அணியும் உள்ளன.
B குழுவின் புள்ளிப்பட்டியலில் அயர்லாந்து மற்றும் வனுவாடு ஆகிய அணிகள் முதல் இரண்டு இடங்களிலும் உள்ளன.
9 ஆவது முறையாக நடைபெற்று வரும் மகளிர் இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வாண்டிற்கான மகளிர் T20 ஆசியா கிண்ணப் போட்டிகள் ஜூலை மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


