இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் 3 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் நிரஞ்சன் ஷா (Niranjan Shah) மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது இந்தியா அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 445 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்தியா அணி சார்பாக ரோஹிட் சர்மா (Rohit Sharma) 131 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 112 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றார்.
இங்கிலாந்துக்கு மார்க் வூட் (Mark Wood) 4 விக்கட்டுக்களையும் மற்றும் ரெஹான் அஹமெட் (Rehan Ahamed) 2 விக்கட்டுக்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 319 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் பென் டக்கட் (Ben Duckett) 153 ஓட்டங்களை அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் மொஹம்மட் சிராஜ் (Mohammed Siraj) 4 விக்கட்டுக்களையும், ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) மற்றும் குல்தீப் யாதவ் தலா (Kuldeep Yadav) 2 விக்கட்டுக்களையும் இந்தியா அணி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 430 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்திருந்த போது தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இந்தியா சார்பாக யஷஸ்வி ஜய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 214 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் (Joe Root), டொம் ஹர்ட்லீ (Tom Hartley) மற்றும் ரெஹான் அஹமெட் (Rehan Ahamed) ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்களை பெற்றுக் கொடுத்தனர்.
தொடர்ந்து 557 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 122 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக மார்க் வூட் (Mark Wood) 33 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 5 விக்கட்டுக்களையும், குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) 2 விக்கட்டுக்களையும் இந்தியா அணி சார்பாக பெற்றார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் இந்தியா அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
மேலும் இந்த வெற்றியுடன் இந்தியா அணி 2023-25 இற்கான ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது நிலைக்கு முன்னேறியுள்ளது.