வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இனி தாங்கள் உள்ள இடத்திலிருந்தே, இணையவழி மற்றும் நிகழ்நிலை முறைமை மூலம் கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கக் கூடிய புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 20 வெளிநாட்டு இலங்கை தூதரகங்கள்/தூதுப்பணிக் குழுக்கள் மூலம் இந்த சேவை அமுல்படுத்தப்படும். அதற்கான உயிர்க்குறி சேகரிப்பு நிலையங்கள், தொழில்நுட்ப வசதிகள், மென்பொருள் அபிவிருத்தி மற்றும் நிகழ்நிலை தகவல் பரிமாற்ற அமைப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயற்படுத்த, புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு (IOM), தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தங்கள் கடவுச்சீட்டு தேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த யோசனை, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோரால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்டது.



