இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாஹ்வில் இடம்பெறவுள்ளது.
கடந்த வருடம் டுபாயில் குறித்த தொடருக்கான ஏலம் இடம்பெற்றதையடுத்து, வெளிநாட்டில் இடம்பெறும் இரண்டாவது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஏலம் இதுவாகும்.
வழமைக்கு மாறாக இந்த முறை இடம்பெறவுள்ள குறித்த மெகா ஏலம் இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளன.
10 அணிகளின் உரிமையாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தங்களது அணிகளுக்கான வீரர்களைத் தெரிவு செய்யவுள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும்.
இந்த முறை ஏலத்திற்காக ஆயிரத்து 574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
அதில் இந்தியாவைச் சேர்ந்த ஆயிரத்து 165 வீரர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த 409 வீரர்களும் அடங்குகின்றனர்.
10 அணிகளைச் சேர்ந்த ஒவ்வொரு உரிமையாளர்களும் 25 பேர் கொண்ட அணியைத் தெரிவு செய்ய முடியும்.
இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரில் அணிகள் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களைத் தவிர்ந்த 204 வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஏலமே இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகள், ஏலத்திற்கு முன்னதாக அந்த தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.