இந்தியாவை வீழ்த்திய பங்களாதேஷ்..!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 11வது இளையோர் ஆடவர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவை 59 ஓட்டங்களினால் வீழ்த்திய நடப்பு சம்பியன் பங்களாதேஷ் அடுத்தடுத்து இரண்டு சம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது.
டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது. 199 என்ற இலகுவான ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 35.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இதன் மூலம் பங்களாதேஷ் அணி 2023, 2024 தொடர்களில் சம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர் இக்பால் ஹொசெய்ன் எமொன் வென்றார்.
தொடரில் அதிக தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற அணியாக இந்தியா 1989, 2003, 2014, 2016, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் (7 தடவைகள்) திகழ்கிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் பகிரப்பட்டது. 2017ல் ஆப்கானிஸ்தான் சம்பியனானது.
இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான பங்களாதேஷ் இளையோர் அணிக்கு இலங்கையின் நவீட் நவாஸ் பயிற்சி அளித்து வருகின்றார். நான்கு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கிண்ணத்தில் பங்களாதேஷ் சம்பியனான போதும் நவீட் நவாஸ் பயிற்றுநராக இருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
![]()