February 9, 2026
இந்தியா மீனவர்களின் அத்துமீறல் பாராளுமன்றம் முன் போராட முடிவு!
புதிய செய்திகள்

இந்தியா மீனவர்களின் அத்துமீறல் பாராளுமன்றம் முன் போராட முடிவு!

Jun 17, 2024

இந்திய எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்தியா மீனவர்களைக் கைது செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை யாழில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர்  புனிதப் பிரகாஷ் தெரிவித்தார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியாவில் மீன்பிடி தடைக்காலம் நீக்கப்பட்டுள்ள நிலையில் எல்லை தாண்டி மீனவர்கள் எமது கடற் பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் எமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டுவரும் நிலையில் எமது மீனவர்கள் வாழ வழியின்றியுள்ளனர்.

இந்தியா மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை தடை செய்யுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் யாழ் இந்திய துணை தூதரகம்  கடற்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு எழுத்து மூலமாக கோரிக்கைகளை முன்வைத்தும் மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறது.

இந்தியா மீனவர்களின் அத்துமீறலை நிறுத்துமாறு கோரி அண்மையில் யாழ் இந்திய துணைத் தூதரகம் முன்மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினோம்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எமது நியாயமான கோரிக்கையை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் ஏற்று இந்திய அத்துமீறிய மீன்பிடியாளர்களை தடுத்து நிறுத்தி எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.

அதன் தொடர்ச்சியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற கட்டடத்துக்கு முன்னால் இந்திய அத்துமீறிய மீன்பிடியை தடை செய்யுமாறு கோரி போராட்டம் ஒன்றை விரைவில் நடத்த உள்ளோம்.

ஆகவே எமது கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் உதாசீனம் செய்ய முயன்றால் மீனவ சமூகங்கள் ஒன்றினைந்து தமது கோரிக்கைகளை வெல்வதற்கான போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார் என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *