ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (புதன்கிழமை) பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய/இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஷுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி, இன்றைய தினம் இரண்டாவது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பணிச்சுமையை கட்டுப்படுத்தும் முயற்சியாக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த போட்டியில் விளையாடாமல் ஓய்வெடுத்துள்ளார் எனவும், அவர் 5 போட்டிகளில் 3-இல் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியாவின் பந்துவீச்சு சற்று பலவீனமாகவே காணப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முந்தைய டெஸ்டில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சதமடித்து இந்தியாவை 475 ரன்களுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பும்ரா தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த இயலாததால், இங்கிலாந்து 371 ரன்களை வெற்றிகரமாக எடுத்து போட்டியை வென்றது.

வறண்ட எட்ஜ்பாஸ்டன் பீட்ச் காரணமாக பும்ரா இடத்தில் வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி விளையாட வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து அணியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை, ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இருந்தபோதும் அவர்கள் மாறாத 11 பேர் கொண்ட அணியை (XI)  அறிவித்துள்ளனர் என கூறப்படுகின்றது.

இந்த போட்டி ஜூலை 2 (இன்று) முதல் 6 வரை நடைபெறவுள்ளது. இந்தியா இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியடைந்தால் தொடரில் சமமான நிலையைப் பெற்றுக்கொள்ளும் முக்கிய வாய்ப்பு கிடைக்கும். மேலும், பும்ரா இல்லாத நிலையில், இளம் வீரர்களின் ஆட்டம் தான் முக்கிய முடிவுகளை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here