இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமனம்..!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கிண்ணப் போட்டி முடிந்த பின்னர் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகிய நிலையிலேயே இந்திய கிரிக்கெட் பயற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடப்போவதாகக் கூறியே டிராவிட் உலகக் கிண்ணத்தை வென்ற பின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினர்.
இதனை அடுத்து கம்பீர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா, எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பயிற்சியாளராக கம்பீரின் முதல் பணியாக இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் அமையவுள்ளது.
இந்த மாத கடைசியில் இலங்கை வரும் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் பொறுப்பாக 2027 டிசம்பர் வரை மூன்றரை ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முன்னதாக அறிவித்திருந்தது.
42 வயதான கம்பீர் இந்திய கிரிக்கட் வரலாற்றின் இளம் பயிற்சியாளாராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()