இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தில் பெண் வைத்தியரின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் வைத்தியர் கடந்த 09 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் எனும் நபர் கைது செய்யப்பட்ட நிலையில் உளவியல் சோதனை நடத்தப்பட்டது.
அடுத்த கட்டமாக நீதிமன்ற அனுமதியுடன் உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள மத்திய புலனாய்வு அமைப்பு தீர்மானித்துள்ளதுடன் குறித்த வைத்தியலையில் சட்டவிரோதமாக மனித உறுப்புகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இதன்காரணமாக பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் சந்தீப் கோஷ், கொலையை மறைக்க முயற்சி செய்த நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கொலை நடைபெற்ற மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் ஆய்வு நடத்தப்பட உள்ளதாகவும் இதன்மூலம் எத்தனை பேர் சம்பவ இடத்தில் இருந்தனர் என்பதையும் கண்டறிய முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.