இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே கடலில் பயணித்த 65 பேரை ஏற்றிய படகு கவிழ்ந்ததில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலரின் நிலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல், ஆரம்பத்தில் சிறிது நேரம் சென்றதன் பின் மூழ்கியதால், பசார்னாஸ் எனும் தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தினர் விரைந்து 32 பேரை தேடி வருகின்றனர்.

மீட்புப் பணியில் உயிர் பிழைத்த 29 பேர் மீட்கப்பட்டதோடு, உயிர் பிழைத்தவர்களில் பலர் கடலில் பல மணிநேரம் மிதந்ததால் உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இவ்விடத்தில் ஏற்பட்ட இந்த கொடூர விபத்து, மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்துள்ளதாக இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ அறிவித்தார். உடனடியாக அவசர மீட்பு நடவடிக்கைகளை துவக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசியா, 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டது மற்றும் கடல் பயணங்களில் பாதுகாப்பு குறைபாடுகள், போதுமான உயிர்காப்பு சாதனங்கள் இல்லாமை போன்ற காரணங்கள் பெரும்பாலும் கடல் பேரழிவுகளுக்கு வழிவகுக்கின்றன.
இந்த சம்பவம், சமீபத்தில் மார்ச் மாதம் பாலி அருகே 16 பேரை ஏற்றிய படகு மூழ்கியதில் ஒரு ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்ததை நினைவுகூரச் செய்கிறது.
2018 ஆம் ஆண்டில் சுமத்ரா தீவில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த படகு விபத்தும் இந்த கடல் பேரழிவுகளின் மிகப்பெரும் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகின்றது.



