இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக நேற்றைய தினம் (14) அதிகாலை 6.21 மணியளவில் எரிமலை வெடித்துள்ளது.
மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எரிமலைக்குழம்புகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எரிமலை ஆய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால் அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அங்குள்ள 150 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் மக்களுக்கு எரிமலை சாம்பலால் ஏற்படும் சுவாச நோய்த் தொற்றுகளை தவிர்க்க இலவச முககவசம் வழங்கப்பட்டுள்ளது.
சுமாத்திரா தீவின் மிகவும் உயிர்ப்புடன் இருக்கும் எரிமலை மட்டுமன்றி, இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் விழித்திருக்கும் 130 எரிமலைகளில் ஒன்று என்ற வகையிலும் மராபி கவனம் பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மராபி மலையில் வெடிப்பு ஏற்பட்ட போது, எரிமலையில் நடைபயணம் மேற்கொண்ட 75 பேரில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.