இந்தோனேசியா: புளோரஸ் தீவில் லெவோடொபி எரிமலை தீவிர வெடிப்பு – 3 முறை வெடித்த சிகரம்!

0
6
Mount Lewotobi Laki-laki spews volcanic materials during an eruption, as seen from Konga, Titehena, East Flores, East Nusa Tenggara province, Indonesia, November 12, 2024. REUTERS/Stringer

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள லெவோடொபி லக்கிலக்கி (Lewotobi Laki-laki) எனும் இரட்டைச் சிகர எரிமலை மீண்டும் தீவிரமாக வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, அந்தப் பகுதியில் பெரும் பேரிடர் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு கட்டத்தில், சாம்பல் மேகம் 18 கி.மீ உயரம் வரை வானத்தில் பறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இதனால் மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

வெடிப்பின் தாக்கலின் காரணமாக, பாலி ரிசார்ட் தீவுக்கு செல்லும் மற்றும் புறப்படும் குறைந்தது 24 விமானங்கள் திங்கட்கிழமை ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், சில விமானங்கள் மறுநாளில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

இந்த எரிமலையானது, மூன்று முறை வெடித்துள்ளது என கூறப்படும் நிலையில், திங்கட்கிழமை காலை  முதலில் ஏற்பட்ட வெடிப்பு , கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இந்த எரிமலையில் ஏற்பட்ட மிகவும் உயர்ந்த வெடிப்பு என புவியியல் முகாமைத் தலைவர் முகமது வாஃபித் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக, அன்றைய தினம் மாலை  இரண்டாவது வெடிப்பும், செவ்வாய்க்கிழமை (இன்று) அதிகாலை  குறைந்த அளவிலான மூன்றாவது வெடிப்பும் நிகழ்ந்துள்ளன.

இந்த வெடிப்புகளுடன் இடிமுழக்கமும் எழுந்ததுடன், சாம்பல் மற்றும் உருகிய லாவா காற்றில் 13 கி.மீ வரை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

இன்றுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும், சிலர் தங்கள் வீடுகளில் தங்கியுள்ள நிலையில், தண்ணீர், உணவு மற்றும் முகக்கவசம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளதாக உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், “நீர்த்தொட்டிகளில் தண்ணீர் இருக்கிறது, ஆனால் அது சுத்தமானதா என்பது குறித்து உறுதி இல்லை.” எனவும்  “கடந்த வெடிப்பில் எங்கள் பகுதி முழுவதும் அடர்த்தியான சாம்பலால் மூடப்பட்டிருந்தது.” எனவும் புலுலேரா என்ற கிராமத்தை வழிநடத்தும் பவுலஸ் சோனி சாங் துக்கன் என்பவர் கூறியுள்ளார்.

அதிகாரிகள் எச்சரிக்கையாக, எரிமலையின் மையத் துவாரத்திலிருந்து 7 கி.மீ சுற்றளவில் பொதுமக்கள் நுழையக் கூடாத பாதுகாப்பு வலையறையை விரிவாக்கியுள்ளனர். மேலும் கனமழை பெய்தால் லஹார் வெள்ளம் எனப்படும் எரிமலைக் கழிவுகளைக் கொண்ட சேறுவெள்ளம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா பசிபிக் “நெருப்பு வளையத்தில்” (Ring of Fire) அமைந்துள்ளது. இதனால், இங்கு அடிக்கடி எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அதிலும், லெவோடொபி லக்கிலக்கி இந்த ஆண்டு ஏற்கனவே பலமுறை வெடித்து உள்ளது, கடந்த நவம்பரில், இதே எரிமலையின் வெடிப்பில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எரிமலையின் மற்றொரு சிகரமான பெரெம்புவான் (“பெண்” எனும் பொருள்), 1,703 மீட்டர் உயரம் கொண்ட அமைதியான சிகரமாகும். இதனுடன் இணைந்த லக்கிலக்கி (“ஆண்“) சிகரம் தற்போது தீவிர வெடிப்பில் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here