பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (9) இடம்பெற்ற அமர்வில் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதில் பௌத்த பிக்குகள் தடையாக உள்ளார்கள் என்ற தவறான நிலைப்பாடு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுவதாக நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அனைத்தையும் எதிர்க்கும் ஒரு சில பிக்குகளினால் இந்த நிலை காணப்படுகிறது.
தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபித்து தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.
இன வன்முறையால் இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ளது.
இலங்கையில் இரண்டாம் தர பிரஜைகள் என்று எவருமில்லை என்பதை உறுதிப்படுத்துவது தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகச் சட்டமூலத்தின் நோக்கமாகும்.
ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் இன நல்லிணக்கம் சிறந்த முறையில் இருந்தது.
ஆனால் தற்போது கிராம புறங்கள் இனம், மதம் மற்றும் அரசியல் ரீதியில் பிளவுப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது குறித்து புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அண்மையில் ஜனாதிபதி உட்பட மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
ஒரு தரப்பினர் இதற்கு சாதகமாக பேசியுள்ள நிலையில் பிறிதொரு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.
தேசிய நல்லிணக்கத்துக்கு பௌத்த பிக்குகள் எதிராக உள்ளார்கள் என்ற தவறான நிலைப்பாடு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுகிறது.
அனைத்தையும் எதிர்க்கும் ஒருசில பிக்குகளால் ஒட்டுமொத்த பிக்குகளும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறார்கள்.
ஆகவே தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்த விசேட கவனம் செலுத்தி தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் இனவாதத்தை விரும்பவில்லை அமைதியாக வாழும் சூழலுடன் இலங்கையர் என்ற அடிப்படையில் வாழ விரும்புகிறார்கள்.
ஒருசில அரசியல்வாதிகள் இனவாதத்தை ஒக்சிசன் போல் பயன்படுத்துகிறார்கள். இனவாதத்தை தூண்டி விட்டு அதனூடாக அரசியல் செய்கிறார்கள் என நீதியமைச்சர் தெரிவித்தார்.