அரச இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் குற்றவாளிகளான இம்ரான் கான் மற்றும் அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரோஷி ஆகியோர் சார்பில் பிணை கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்து வந்த மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்றைய தினம்(22) இருவருக்கும் பிணை வழங்குவதாக தீர்ப்பு வழங்கியது.
அதன்படி குறித்த இருவரும் தலா ரூ.10 இலட்சம் ரொக்கப் பிணையில் செல்ல உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சர்தார் தாரிக் மசூத், அதார் மினால்லா, சையத் மன்சூர் அலி ஷா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பிணை அளித்துள்ள போதிலும் இம்ரான் கான் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் விடுவிக்கப்படுவது சந்தேகமே என அவரது சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.