கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இயக்கச்சி சந்தியில் புதிதாக மதுபான சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதையடுத்து கிராம மக்கள் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (02)காலை 10.00மணியளவில் இயக்கச்சி சந்தி ஏ09வீதி அருகே இடம்பெற்றிருந்தது.
மேலும் குறித்த மதுபான சாலை அமைய இருக்கும் இடத்திலிருந்து சுமார் 50மீற்றர் தொலைவில் பாடசாலை அமைந்துள்ளதாகவும் எதிரில் கோவில்,இயக்கச்சி பொதுச்சந்தை என அதிகளவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுகின்ற இடமாகவுள்ளதாகவும் குறித்த இடத்தில் பேரூந்து தரிப்பிடம் ஒன்று உள்ளதெனவும் அதில் தூர பிரதேசங்களில் இருந்து வரும் பாடசாலை மாணவர்கள் பேரூந்துக்காக காத்திருக்கும் இடமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கினால் பல குற்றச்செயல்கள் இடம்பெறும் எனவும் பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பும் கிடைக்கபெறாது எனவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தின் போது இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள அனைத்து கடைகளும் போராட்டத்தின் போது கதவடைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
போராட்டத்தின் முடிவில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் பளை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பளை பிரதேச அமைப்பாளரிடமும் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.