
இரண்டு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்..!
தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் (02) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, தென் மாகாண ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இருவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
முன்னதாக, ஏப்ரல் மாத இறுதியில் ஆளுநர் மாற்றம் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கமைய, வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் லக்ஷமன் யாபா அபேவர்தனவை தென் மாகாண ஆளுநராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று தென் மாகாண ஆளுநராக லக்ஷமன் யாபா அபேவர்தன நியமிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் நியமிக்கப்படலாம் எனவும் ஊகம் வெளியாகியிருந்தது.