பிரித்தானியாவின் ராயல் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள் பஹ்ரைன் துறைமுகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மத்திய கிழக்குத் துறைமுகத்தில் உள்ள கடற்கரையிலிருந்து பிரித்தானியாவின் ராயல் கடற்படையை சேர்ந்த HMS Chiddingfold மற்றும் HMS Bangor என்ற 2 போர் கப்பல்களே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மேலும் பஹ்ரைன் துறைமுகத்தில் ராயல் கடற்படையை சேர்ந்த HMS Chiddingfold கப்பல் பின் நோக்கி நகர்ந்த போது நிறுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்த HMS Bangor போர் கப்பல் மீது மோதியுள்ளதாகவும் இது தொடர்பில் வெளியான காணொளியில் தெரியவந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பிரித்தானிய ராயல் கடற்படையின் சார்பாக வளைகுடா பகுதியில் இரண்டு போர் கப்பல்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன எனவும் விபத்தினால் யாருக்கும் எந்தவித ஆபத்துகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு சிறப்பு கப்பல்களும் கடல்வழி மார்க்கமான வர்த்தகத்தை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்கு உதவுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.