மீரிகம – தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத் தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த இறப்பர் தொழிற்சாலையில் நேற்று (27) இரவு 9.20 மணியளவில் பரவிய குறித்த தீயை இன்று காலை வரை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தொழிற்சாலையில் பணி புரிந்த இரவு நேர பணியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், கம்பஹா தீயணைப்பு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலானது இரசாயனப் பொருட்கள் காணப்பட்ட பகுதியிலேயே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதோடு, இது தொடர்பான இழப்புகள் இதுவரை மதிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.