சவூதி கிங் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ரியாத்தில் உள்ள அல்-அவ்வல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அல் நாசர் மற்றும் அல் கலீஜ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் அல் நாசர் அணி ரொனால்டோ மற்றும் சாடியோ மானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
இதில் ரொனால்டோ இரண்டு கோல்களையும், சாடியோ மானே தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி அணிக்கு வெற்றியை தேடித்துந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மே 31 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் அல் ஹிலாலை எதிர்த்து அல் நாசர் விளையாடவுள்ளது.
நேற்றையப் போட்டியில் 17-வது நிமிடத்தில் அல் கலீஜ் விட்ட தவறை சாதகமாக்கிக் கொண்டு ரொனால்டோ தனது முதல் கோலை அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.
அதேபோல் போட்டியின் 37வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சாடியோ மானே கோலாக மாற்றினார்.
இதன் மூலம் போட்டியின் முதல் பாதியில் அல் நாசர் அணி 2 – 0 என்ற ரீதியில் முன்னிலைப் பெற்றிருந்தது.
பின் இரண்டாம் பாதியில் 57 வது நிமிடத்தில் ரொனால்டோ மற்றுமொரு கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தார்.
போட்டியின் 77வது நிமிடத்தில் அல் கலீஜ் அணியின் வீரர் முகமது அல் கப்ரானி காயம் காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறிய நிலையில் அந்த அணி பத்து பேருடன் விளையாடியது.
எவ்வாறாயினும், போட்டியின் 82வது நிமிடத்தில் அல் கலீஜ் அணி சார்பில் ஃபவாஸ் அல்-டோரைஸ் முதல் கோலை அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.