காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அனர்த்தங்கள் மற்றும் அவசர சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவசியமான உபகரணங்களை அமெரிக்கா இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணியகத்தின் நிதியுதவியின்கீழ் ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்த உபகரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த உபகரணங்கள் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணியகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய மனிதாபிமான ஆலோசகர் டஸ்ரின் ஷியோவினால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் அதிகாரி டக் சொனெக், ‘உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதும், அனர்த்தங்களால் மக்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதுமே அமெரிக்காவினால் இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமான அனர்த்த உதவி செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.