July 14, 2025
இலங்கைக்கு வரவிருந்த சாந்தன் உயிரிழப்பு..!
News News Line Top Updates புதிய செய்திகள்

இலங்கைக்கு வரவிருந்த சாந்தன் உயிரிழப்பு..!

Feb 28, 2024

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா உடல்நலக்குறைவால் இன்றைய தினம்(28) அதிகாலை காலமானார்.

இவர் சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில்  சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக  இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 மேலும்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.

சாந்தன்  தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்ததுடன்,  சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க இந்திய மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

இருப்பினும் , சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

 ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

 கோமநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை,  32 வருடங்களாக மகனின் வரவுக்காய் யாழ்ப்பாணத்தில் காத்திருக்கும் அவரது தாயார் ,   ஜனாதிபதி  ரணில் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும்   மகனை நாட்டுக்கு வரவழைக்க  மனு கொடுத்திருந்த நிலையில்,  தமிழகத்தில் சாந்தன் உயிரிழந்துள்ளமை  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *