கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும் (OCC) இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இறுதி ஒப்பந்தத்தை ஜப்பான் வரவேற்றுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எடுத்த முயற்சிகளை ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா, பாராட்டினார்.
மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கையெழுத்திடுவதன் முக்கியத்துவத்தையும் கூறினார்.
கடன் மறுசீரமைப்பை மற்ற கடன் வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய வகையில் செயல்படுத்தவும் நம்பிக்கை தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, இருதரப்பு உடன்படிக்கையை விரைவாக முடிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் நோக்கம் உறுதிசெய்யப்பட்டவுடன் தற்போதுள்ள திட்டங்களுக்கான கடன்களை உடனடியாக மீள ஆரம்பிப்பதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் ஆதரவளிக்கும் ஜப்பானின் விருப்பத்தையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.