இலங்கையில் கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதில் இருந்த அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான கடன் மறுசீரமைப்பு தொடர்பான நற்செய்தி தற்போது கிடைத்துள்ளது.
மேலும், 2032ஆம் ஆண்டுக்குள், அரச கடன் தொகை மொத்தத் தேசிய உற்பத்தியில் 95 வீதம் வரை குறைக்கப்பட வேண்டும்.
2027 மற்றும் 2032 காலக்கட்டத்தில் மொத்த நிதித் தேவை 13 வீதம் வரைக் குறைக்கப்பட வேண்டும். 2027-2032 காலகட்டத்தில் வெளிநாட்டுக் கடன் சேவையும் 4.5 வீதம் வரைக் குறைக்கப்பட வேண்டும்.
இந்த 03 இலக்குகளை நிறைவு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட கடன் மறுசீரமைப்புக்கு நாம் இப்போது உடன்பட்டுள்ளோம்.
அதன்படி, இந்த நாட்டிற்கான கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதற்காக நிலவிய அனைத்து நிச்சயமற்ற தன்மையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் இலங்கையில் பணவீக்கம் 70 வீதத்திலிருந்து 1.7 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் திறைசேரி உண்டியல் ஏலத்தில், ஓராண்டு திறைசேரி உண்டியல்களின் வட்டி விகிதம் 10 வீதத்தை எட்டியுள்ளது என செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.