இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வலுவாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றுவதற்கு நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம், அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
2024 டி20 உலகக் கிண்ணமானது அமெரிக்காவில் ஆரம்பமாகி தற்சமயம் நடைபெற்று வருகிறது.
இதில் இலங்கை அணி எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் படுதோல்வியை தழுவியுள்ளதுடன், மோசமான செயல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெற்ற தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் 77 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
அதேநேரம் இன்று டல்லாஸில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்களாதேஷிடம் 2 விக்கெட்டுகளினால் வீழ்ந்தது.
அது மாத்திரமல்லாது டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதான நெதர்லாந்துடனான பயிற்சி ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.
இவ்வாறான நிலையிலேயே அமைச்சர் அலி சப்ரி, தனது எக்ஸ் தளத்தில் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.
அதில், நமது கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் என்ற வகையில், சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவையை என்னால் சான்றளிக்க முடியும் என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் புதிய சட்டத்தின் மூலம் இந்த முக்கியமான மாற்றங்களைச் செயல்படுத்தும் விளிம்பில் இப்போது நாம் இருக்கிறோம்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம் மற்றும் அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டோ வியாபாரமோ அல்ல, இது நமது தேசிய உணர்வின் பிரதிபலிப்பாகும்.
தற்போது, எங்களின் செயல்திறன் ஏற்கத்தக்கதாக இல்லை, மாற்றத்திற்கான நேரம் இப்போது வந்துவிட்டது என அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.