இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை குடியுரிமையை கைவிட்டவர்கள் உள்ளிட்ட இலங்கை யை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கை துணையாளர்கள் ஆகியோர் நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்வதற்கான புதிய விதிமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள், குடியுரிமைசட்டத்தின் 19, 20 அல்லது 21ம் சரத்தின் பிரகாரம் குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்யமுடியும். மேலும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத்துணையாளர்கள் திருமணம் செய்து கொண்டு ஆறு மாதங்களில் விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை விண்ணப்பதாரிகளிடம் ஆயிரம் டொலர்கள் அறவீடு செய்யப்படுவதுடன், வெளிநாட்டு வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளிடம் தலா 400 டொலர்கள் அறவீடுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி 2383/17ம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.