மலேசியா சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று மலேசியப் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றிருந்த போதே இச் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பானது மலேசியப் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது,
மலேசியப் பிரதமர் ஸ்ரீ அன்வர் பின் இப்ராஹிமை கௌரவத்தோடு இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தது பெருமையும் பாக்கியமும் எனக்குக் கிடைத்ததென்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களைப் பற்றி கலந்துரையாடினர் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர்களுக்காக மலேசியாவின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்த சாத்தியக்கூறுகளும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டன. இதற்காக பிரதமரிடம் நேரடியாக கேட்டுக்கொண்டதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்த பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதியுடன் உள்ளார் என்றும், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஒவ்வொரு நேர்மறையான முயற்சிக்கும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு, இருநாடுகளுக்கிடையிலான உறவுகளில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.




