January 23, 2026
ஈராக்கில் குகை தேடல் நடவடிக்கையில் மீதேன் வாயு தாக்கத்தினால் 12 துருக்கிய வீரர்கள் உயிரிழப்பு!
World News உலக அரசியல் புதிய செய்திகள்

ஈராக்கில் குகை தேடல் நடவடிக்கையில் மீதேன் வாயு தாக்கத்தினால் 12 துருக்கிய வீரர்கள் உயிரிழப்பு!

Jul 7, 2025

துருக்கியின் இராணுவம் ஈராக்கில் மேற்கொண்ட தேடுதல் பணிகளின் போது, மீதேன் வாயு தாக்கத்திற்குள்ளாகி 12 துருக்கிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த,  இந்த விபத்தி குறைந்தது 19 பேர் மீதேன் வாயுவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அதில் 12 வீரர்கள் திங்கட்கிழமையன்று (இன்று) உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

துருக்கி நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், “மிகுந்த வேதனையுடன் வீரர்களின் குடும்பத்தாருக்கும் துருக்கிய ஆயுதப்படையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.

இவ்விபத்திற்கான பிண்ணனியாக, பாதிக்கப்பட்ட வீரர்கள், மே 2022 இல் “ஆபரேஷன் கிளாவ் லாக் (Operation Claw Lock)” என்ற இராணுவ நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட துருக்கிய வீரரின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், இந்த நடவடிக்கையில் குகைகள் மீது விமான தாக்குதல்களும் தரைநில ஆக்கிரமிப்பும் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

மீதேன் வாயு நேரடி விஷம் அல்ல. ஆனால், அது காற்றை மாற்றி எடுத்துவிடுவதால், குறிப்பாக குறுகிய, காற்றோட்டம் இல்லாத இடங்களில் சுவாசிப்பதை சிரமமாக்குகின்றது. இது சத்தமின்றி, விரைவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் திறன் கொண்டதாகும்.

மேலும், இவ்விபத்து நிகழ்ந்த பகுதி, கடந்த 4 தசாப்தமாக துருக்கிய அரசு எதிர்கொண்டு வரும் *குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK)*யின் நடவடிக்கைகள் நடைபெறும் பகுதியாகும்.

1980-களில் குர்த் மக்களுக்கு தனி நாடு உருவாக்கவேண்டும் என்ற நோக்குடன் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆயுதபூர்வமான போராட்டத்தைத் தொடங்கியதாகவும், பின்னர் அவர்கள் இலக்கை மாற்றி, அதிக சுயாட்சி மற்றும் உரிமைகள் நோக்கி நகர்ந்ததாகவும், இந்தக் கிளர்ச்சிப் போராட்டத்தில் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

பொதுவாக தீவிரவாத அமைப்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிலையான போர் நிறுத்தமொன்றை அறிவித்ததுடன், மே மாதத்தில் அவர்கள் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது எனவும், தங்களது “வரலாற்றுப் பணி” நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்த வாரம் ஈராக் குர்திஸ்தானில் PKK போராளிகள் ஆயுதம் கைவிடும் நிகழ்வு நடக்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிகழ்ந்த இவ்விபத்து, துருக்கிய பாதுகாப்புப் பணிகள் மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி இடையிலான எதிர்பாராத அவசர சம்பவமாகவே கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *