ஈரானிய ஜனாதிபதிம் இப்ராஹி ரைசியும் அவரது வெளியுறவு அமைச்சரும் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் பனிமூட்டமான வானிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பினர் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது என்று ஈரானிய அதிகாரி ஒருவர் இடிபாடுகளை தேடுதல் குழுக்கள் கண்டறிந்த பின்னர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது” என்று அதிகாரி ஊடகம் ஒன்றிற்கு கூறினார்.
இன்று அதிகாலையில் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள இடிபாடுகளை அடைய மீட்புக் குழுக்கள் இரவு முழுவதும் பனிப்புயல் மற்றும் கடினமான நிலப்பரப்புகளை எதிர்கொண்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு ..
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியின் மரணம் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ரைசி அண்டை நாடான அஜர்பைஜானுக்கு விஜயம் செய்து திரும்பிக் கொண்டிருந்தார், அங்கு அவர் அந்த நாட்டின் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து ஒரு அணையைத் திறப்பதற்காகச் சென்றிருந்தார் .
ஈரானிய அதிபரின் வாகனத் தொடரணியில் மூன்று ஹெலிகாப்டர்கள் இருந்ததாகவும், மற்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததாகவும் அரசு சார்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெளியுறவு அமைசர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் , கிழக்கு அஜர்பைஜான் கவர்னர் மாலேக் ரஹ்மதி மற்றும் ஈரானிய உச்ச தலைவரின் மாகாணத்தின் பிரதிநிதி அயதுல்லா முகமது அலி-ஹஷேம் ஆகியோர் ரைசி சென்ற ஹெலிகாப்டரில் இருந்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சற்று முன்னர் ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரை மீட்பு பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு ..
ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று (20) உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உட்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், அந்நாட்டு ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கமைய ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அந்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்புடத்தக்கது.