
உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்கிறார் மோடி
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவத் சௌத்ரி, காங்கிரஸ் தலைவர் ராகுலை புகழ்ந்திருப்பதன் மூலம் காங்கிரஸ் – பாகிஸ்தான் இடையேயான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய மோடி, இந்தியாவில் காங்கிரஸ் பலவீனமடைந்தபோதெல்லாம் பாகிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் பலரும் கட்சிக்காக பிரார்த்தனை செய்தனர்.
நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
ஒற்றுமையைப் பாருங்கள், இந்தியாவில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துவிட்டது, அதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால், இங்கே காங்கிரஸ் மரணித்துக்கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுதுகொண்டிருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தான், ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு உள்ளது.
ஏற்கனவே உங்களுக்கெல்லாம் தெரியுமே, காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானின் ரசிகர் என்று.
தற்போது பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பேச்சின் மூலம், பாகிஸ்தான் – காங்கிரஸ் இடையேயான தொடர்பு முற்றிலும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
பலவீனமான காங்கிரஸ் அரசு, பயங்கரவாதிகளுக்கு தகவல்களை வழங்கியது, ஆனால், மோடியின் பலமான மத்திய அரசு, பயங்கரவாதிகளைக் கொன்றது என்றும் பிரதமர் கூறினார்