காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில், உதவிக்காக காத்திருந்த பலர் உயிரிழக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்காலிக உதவி முகாம்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில், அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுக்களில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இன்று மட்டுமே குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, இஸ்ரேலின் காசா மீதான போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 57,130 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,34,592 பேர் காயமடைந்துள்ளனர்.
மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கும் மக்களை நோக்கி நேரடி வன்முறை நடைபெறுவது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலிய இராணுவத்துடன் இணைந்த அமெரிக்க ஒப்பந்த நிறுவனங்கள் பாதுகாப்பு வேலைக்கு பதிலாக தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஹமாஸ் இயக்கம் 60 நாள் தற்காலிக போர்நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரை ஒன்றைப் பெற்றுள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதல்களில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர் என்றும், 200-க்கும் மேற்பட்டோர் கைதாகப் பிடிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



