Tamil News Channel

உலகில் ஊதா கலரு ஆப்பிள் இருப்பது உண்மையா?

‘ஊதா வண்ணத்தில் ஆப்பிள்கள் உலகத்தில் இல்லை’ எனும் தகவலோடு இந்தப் பதிவைத் தொடங்கலாம். அதோடு, ஊதா ஆப்பிள்களை எங்குப் பார்த்தாலும், ‘இந்த ஆப்பிள் உண்மையில் இல்லை’ எனும் தகவலையும் சேர்த்துக்கொள்ளவும். வாய்ப்பிருந்தால் இதை சாட்ஜி பிடிக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் செய்தி இதுதான். அண்மையில் கனடா நாட்டில் பயிரிடப்படும் அபூர்வமான ஊதா நிற ஆப்பிள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலானது. இந்தத் தகவலுடன் பகிரப்பட்ட ஊதா நிற ஆப்பிள்களின் ஒளிப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன. இந்த ஆப்பிள்கள் கனடா நாட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதியில், குளிரான சூழலில் விளைபவை எனத் தகவல் சொல்லப்பட்டது. அவ்வளவுதான், ஊதா நிறத்தில் ஆப்பிளா எனும் ஆச்சரியத்தோடு பலரும் இத்தகவலைப் பகிர்ந்தனர். ஒரு சிலர், இந்த ஆப்பிள்களைத் தேடி கனடா நாட்டின் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்கே படையெடுக்கவும் செய்தனர்.

இப்படி ஊதா நிற ஆப்பிள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த நிலையில், தோட்டக்கலை வல்லுநர்கள், இப்படி ஒரு ஆப்பிள் இயற்கையில் கிடையாது என்பதைத் தெளிவுபடுத்தினர். கனடா நாட்டுத் தோட்டக்கலை உரிமையாளர்களும், இப்படி ஒரு ஆப்பிள் இங்கு விளைந்ததே இல்லை எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இணையப் பொய்களைத் தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் முன்னோடி இணையதளமான ’ஸ்னோப்ஸ்’  இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து, இந்தப் படமும், தகவலும் பொய்யானது எனத் தெரிவித்துள்ளது.

உலகில் இல்லாத இந்த ஊதா நிற ஆப்பிள்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் துணைகொண்டு உருவாக்கப்பட்டவை. எழுத்து வடிவில் கட்டளையிட்டால், அதற்கேற்ற தோற்றங்களை அச்சு அசல் போல டிஜிட்டல் வடிவில் உருவாக்கித்திரும் ஆக்கத்திறன் ஏஐ கொண்டு இந்தப் பொய்யான ஆப்பிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் தோற்றமே மயங்க வைப்பதாக இருந்தாலும், உடன் இணைக்கப்பட்டிருந்த தகவல்களும் நம்பும்படி இருந்தன.

ஜான் இனிக்ஸ் எனும் டிஜிட்டல் கலைஞர் இந்த ஒளிப்படங்களை தான் உருவாக்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். ‘#unnaturalistai’ எனும் பெயரில் செயல்பட்டு வரும் இனிக்ஸ், ஊதா ஆப்பிள்களை உருவாக்கியது ஏன்? என்கிற விளக்கத்தை அளிக்கவில்லை. ஆனால், இனிக்ஸின் இன்ஸ்டகிராம் பதிவில் ‘பொறுப்பு துறப்பு’ எனும் குறிப்பு சேர்க்கப்பட்டு ‘இவை ஏஐ ஆப்பிள்கள், உண்மையில் இவை உலகில் இல்லை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு இந்தப் பதிவையும் அணுக முடியவில்லை.

இணையத்தில் பொய்ச்செய்திகளும் பிழையான தகவல்களும் பரவுவது புதிதல்ல என்றாலும், ஏஐ யுகத்தில் இந்த ஆபத்து பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. உண்மையைப் போல் தோன்றும் ஓர் ஒளிப்படம் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லாமல், உண்மைக்கு மாறான ஒரு தகவலை நாம் நம்பிவிட தயாராக இருப்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

‘இந்த மனிதர் உலகில் இல்லை’ எனும் ஏஐ நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பொய் மனிதர்களை முன்னிறுத்தும் தளத்தையும், அதன் பின் அலையென இதே பாணியில் உண்டான ஏஐ தளங்களையும் இந்நிகழ்வு நினைவுபடுத்துகிறது. ஆக, ஏஐ யுகத்தில், குறிப்பாக ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனப்படும் ஆக்கத்திறன் ஏஐ யுகத்தில் நினைவில் கொள்ள வேண்டிய பேருண்மைகளில் ஒன்று, ஊதா நிற ஆப்பிள் தொடர்பான ‘இந்த ஆப்பிள் உண்மையில் உலகில் இல்லை’ எனும் செய்தி என்பதை மறுக்க முடியாது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts