பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உட்பட பல பாராளுமன்ற குழுக்களில் பிரதிநிதிகளை நியமிப்பதையோ அல்லது உத்தியோகபூர்வமாக பங்கேற்பதையோ தவிர்ப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற குழுக்களில் தமது பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் வரை எதிர்க்கட்சிகள் பங்குபற்றுவதை தவிர்க்கும் என எதிர்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக கூறியதாக தெரிவித்துள்ளது .
நாடாளுமன்ற அலுவல் குழு, பொது நிறுவனங்களுக்கான குழு, பொதுக் கணக்குக் குழு போன்ற குழுக்களில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய சபாநாயகர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
எவ்வாறாயினும் அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் உத்தியோகபூர்வமாக நாடாளுமன்ற அலுவல் குழுவில் கலந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 4 பேர் மாத்திரமே அதில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
கடந்த பாராளுமன்றத்தில் வெறும் 6 அரசியல் கட்சிகளை மட்டும் எதிர்க்கட்சியாகக் கொண்டு 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நியமிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேலும் சுட்டிக்காட்டினார்.
“இப்போது, 12 அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருப்பதால், தற்போதைய நான்கு பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை.
இந்த விடயத்தை முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவிடம் தெரிவித்தோம். அவர் ராஜினாமா செய்த பின்னர், தற்போதைய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் இது குறித்து விவாதித்தோம், அது குறித்து ஆய்வு செய்வதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவையும் பாராளுமன்றத்தில் சந்தித்தோம், எமக்கு நெகிழ்வான தீர்வொன்று வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை,” என்றார்.