ஆளும் கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதனாலேயே உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு விரோதமான சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதாகத் தேர்தல் காலங்களில் உறுதியளித்த நபர் தற்போதைய முன்னாள் ஜனாதிபதியின் வழித்தடத்தைப் பின்பற்றிச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித், ரணில், மஹிந்த அனைவரும் ஒன்றிணைய உள்ளதாக பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
எமக்கு எவருடனும் ஒன்றிணைவதற்கான அவசியம் இல்லை எனவும் தனித்து ஆட்சியமைக்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சித்திரை புத்தாண்டு, ரமழான் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற பண்டிகை காலங்களை அண்மித்ததாகவே தேர்தல் இடம்பெறவுள்ளது.
இவற்றைத் தவிர்த்துத் தேர்தலை பிற்போட்டிருக்க முடியும் எனினும், தேசிய மக்கள் சக்திக்கான செல்வாக்கு நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றமையினால், அவசரமாகத் தேர்தல் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.