அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
13 வருட ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவுக்கு கொண்டுவருவதாக அவர் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
149 ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 4,000 ஓட்டங்களை எடுத்த மேக்ஸ்வெல், 2012 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகின்றார்.
2022 ஆம் ஆண்டு நடந்த பயங்கரமான விபத்து ஒன்றில் இடது கால் முறிந்ததைத் தொடர்ந்து சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவது நிச்சயமற்றது என அவுஸ்திரேலியா அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜோர்ஜ் பெய்லியிடம் தெரிவித்திருந்தார்.
அத்துடன், நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போட்டி ஒன்றின் போது, விரலில் காயம் ஏற்பட்டிருந்தது. தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் உபாதை காரணமாக 50 ஓவர்கள் வரை நிலைத்து விளையாடுவதில் சிக்கல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வலது கை துடுப்பாட்ட வீரர்களில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள க்ளென் மேக்ஸ்வெல், 120 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டைப் பராமரித்துள்ளார்.
மேக்ஸ்வெல் தனது ஆஃப்-ஸ்பின் மூலம் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.