கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் எண்ணமே இலங்கைக்கு இல்லையெனும் உறுதியான விடையை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் வழங்கியுள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகள் இந்த விவகாரத்தில் பிரதிபலிக்கின்றன என்றும், அதனை இலங்கை அரசியல் பிரச்சினையாக பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “இந்த பிரச்சினையை தீர்க்க இராஜதந்திர வழிகள் எங்களிடம் திறந்தே உள்ளன. ஆனால், இலங்கையின் நிலப்பகுதியான கச்சத்தீவை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்க இலங்கை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. இது சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று,” என ஹெராத் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களிலும், இந்தியா மற்றும் இலங்கை இடையே மீனவர் பிரச்சனை தொடர்ச்சியாக உருவாகி வருகிறது. குறிப்பாக, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாகக் கூறப்படும் சம்பவங்களில் அடிக்கடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த ஜூன் 27ஆம் தேதி, 1975ஆம் ஆண்டின் அவசரகால சட்டத்தின்படி இந்திய மீனவர்கள் சில பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துகளை நிராகரித்த ஹெராத், கச்சத்தீவு விவகாரம் தற்போது “பாஜக-காங்கிரஸ்” அரசியல் மோதலுக்குள் சிக்கியிருப்பதாகக் கூறியுள்ளார். “இது மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான சண்டை. இதில் இலங்கை அரசின் நிலை தெளிவானது” என்றும் ”எங்கள் நிலத்தை நாம் பாதுகாப்போம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

1974ஆம் ஆண்டு கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா அதிகாரபூர்வமாக கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது. 1976ஆம் ஆண்டு மற்றொரு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளின் மீனவர்களும் ஒருவருக்கொருவர் பிரத்யேக பொருளாதார மண்டலங்களை மீறி மீன்பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனை அமல்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்படத்தக்க விடயமாகும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் மீனவர் பிரச்சனை பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இலங்கை கடற்படையினர், சட்டவிரோதமாக நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்த சம்பவங்கள் தொடர்ந்தும் பேசுபொருளாக மாறி வருகின்றது.



