வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி இங்கு உரையாற்றுகையில்,
கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நான்கு வேலைத் திட்டத்தின் மூலம் தொடர்ந்து பயணித்து, தற்போது எவ்வாறு வெற்றிகரமான பிரதிபலன்கள் எட்டப்பட்டுள்ளன என்பதை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனின் அளவு 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதோடு அதில் 10.6 பில்லியன் டொலர் இருதரப்புக் கடன்களகாகும்.
11.7 பில்லியன் டொலர்கள் பல்தரப்புக் கடன்களாகும்.
14.7 பில்லியன் டொலர்கள் வர்த்தகக் கடன்களாகும்.
அதில் 12.5 பில்லியன் டொலர்கள் பிணைமுறிப் பத்திரங்கள் என்றும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு தியாகமும் செய்யாமல் வெளிநாட்டுக் கடனுக்கான சலுகைகளைப் பெற வேண்டும் எனப் பலரும் பரிந்துரைத்தாலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் சர்வதேச நடைமுறைகளின்படி அவ்வாறு செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
பிரதான கடன் தொகையைத் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவில்லை என்று சிலர் குற்றம் சாட்டினாலும், உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன் வழங்குநர்கள் பிரதான கடன் தொகையை ஒருபோதும் துண்டிக்க மாட்டார்கள் என்பதோடு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தல் , கடன் சலுகை காலம், வட்டி விகிதக் குறைப்பு என்பவற்றுக்கு சலுகை பெற முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதிகாரம் கிடைத்தால் ஆரம்பக் கடனில் 50% வீதத்தை துண்டிக்க கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சிலர் கூறினாலும் அந்த அறிக்கைகள் அவர்களுக்கு சர்வதேச பொருளாதார முறைமைகள் பற்றிய எந்தவித புரிதலும் இல்லை என்பதையே காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கடன் வழங்குநர்கள் அல்லது கடன் பெற்றவர்களுக்கு இல்லை என்றும்,
அது தொடர்பில் தீர்மானம் எடுப்பது சர்வதேச நாணய நிதியம் என்றும் ஒரு நாட்டில் கடன் நிலைபேற்றுத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் தேவையான மறுசீரமைப்புத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியமே தீர்மானிக்கிறது என்றும் தெரிவித்தார்.