கொழும்பில் இருந்து செல்லும் பேரூந்தில் பயணிக்கும் பயணிகளின் பணப்பைகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளடக்கிய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் மற்றும் 2 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புத்தேகம குடாகம மற்றும் புலத்சிங்கள வீதி இங்கிரிய பிரதேசங்களில் வசிக்கும் 20, 23 மற்றும் 30 வயதுடைய இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மூன்று பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து தம்புத்தேகம ஊடாக அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது நகையை யாரோ பேருந்திற்குள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேருந்தை அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்று சோதனையிட்ட போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த பெண்கள் உள்ளிட்ட பெண்கள் கும்பல், நாடளாவிய ரீதியில் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.