Tamil News Channel

Blog Post

Tamil News Channel > புதிய செய்திகள் > கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அதிபர்கள் தரநிலை அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு!

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அதிபர்கள் தரநிலை அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு!

பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகினால், அதற்குப் பாடசாலைகளின் அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு, எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கைக்கு அதிபர்கள் தரநிலை அதிகாரிகள் சங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,505 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டெங்கு மற்றும் சிக்குன்குனியாவினால் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதனையடுத்தே, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து மாகாணக் கல்வி பணிப்பாளர்களுக்கும் கல்வி அமைச்சினால் அண்மையில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.

இதன்படி, சகல பாடசாலை வளாகங்களிலும் நுளம்பு பரவுவதைத் தடுக்கும் வகையிலான திட்டமொன்றைச் செயற்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தது.

அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் காண்பதற்காக, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், பாடசாலை வளாகத்தில் அத்தகைய இடங்கள் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் தனிப்பட்ட முறையில் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அதிபர் தரநிலை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ, குறித்த சுற்றறிக்கையைத் தமது சங்கம் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர்களிடம் குறித்த பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு, உரிய தரப்பினர் விலகி இருப்பதற்கு முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *