இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையில், கழிப்பறையிலிருந்து பிறந்த சிசுவின் சடலத்தை தெரு நாய்கள் கௌவிச்சென்று கடித்துச் சிதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (06) , வைத்தியசாலையின் கழிப்பறை அருகே நாய் ஒன்று குழந்தையின் சடலத்தை கௌவிக்கொண்டு செல்வதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டுள்ளார்.
உடனடியாக குழந்தையின் சடலம் மீட்கப்பட்டபோதிலும், உடல் பகுதியளவு சிதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
சி.சி.ரி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், 17 வயது இளம்பெண் ஒருவர் வைத்தியசாலை கழிப்பறையில் பிரசவித்துவிட்டு பின்னர், இன்னொரு நபருடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, வைத்தியசாலையின் சில வாயில்கள் திறந்த நிலையில் இருந்ததினால், தெரு நாய்கள் உள்ளே நுழைய முடிந்ததாகக் கூறப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.