காசாவில் இரத்தக் கண்ணீர்: 95 பேர் உயிரிழப்பு – குழந்தைகள், பெண்கள், பத்திரிகையாளர் உட்பட பலர் பலி!

0
2

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் பின்னணியில், இஸ்ரேலிய படைகள் கடந்த திங்களன்று காசாவின் பல்வேறு இடங்களில் விமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அந்த தாக்குதலில், குறைந்தது 95 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரபல பத்திரிகையாளர் இஸ்மாயில் அபு ஹதாப் ஆகியோர் அடங்குவதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு காசா நகரில் உள்ள அல்-பகா என்ற கஃபே மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 39 பேர் பலியாகினர். பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த குழந்தைகள் உட்பட இடம்பெயர்ந்த பல பொதுமக்கள் அங்கு சிக்கிக்கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பு அந்தப் பகுதியில் பெரிய பள்ளத்தை உருவாக்கியுள்ளதெனவும் கூறப்படுகிறது.

இதேவேளை, காசா நகரில் உள்ள யாஃபா பள்ளி மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வெளிப்படையான எச்சரிக்கையின்றி வெறும் 5 நிமிடங்களுக்குள் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மத்திய காசாவின் டெய்ர் எல்-பலா பகுதியில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனை வளாகத்திலும் விமானத் தாக்குதல் நடந்துள்ளது. பல இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கூடாரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலியப் படைகள் அந்த மருத்துவமனையை குறிவைப்பது இது குறைந்தது 10வது முறை என சுட்டிக்காட்டப்படுகிறது.

தெற்கு காசா நகரமான கான் யூனிஸில், காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் உதவி விநியோக மையங்களுக்குப் பக்கத்தில் குண்டுவெடிப்பு நடந்ததில், குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

மே மாத இறுதியில் இஸ்ரேல் இந்த மையங்களை கவனிக்கத் தொடங்கியதிலிருந்து, சுமார் 600 பேர் இங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டதுடன், அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் கூறியது.

இந்த இடங்களில் பொதுமக்களைச் சுட உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேலிய வீரர்கள் கூறியதாக ஹாரெட்ஸ் அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் இஸ்ரேலிய அதிகாரிகள் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்குச் சென்றிருந்த வேளையில் நடக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தன்னார்வமாக ஆதரவு வழங்குவதை தொடரும் நிலையிலும், மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பாக முக்கியமான நாடுகளான கத்தார் மற்றும் ஈரான் கவலை தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அரசாங்கம் காசா குறித்து தங்கள் மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்து வருகின்ற நிலையில், ஹமாஸ், “போர்நிறுத்தம் தொடர்பான எந்த புதிய யோசனைகளும் பெறப்படவில்லை” என்று உறுதி செய்து, காசா மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளை வழிமுறைவழியாக பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here