இஸ்ரேலின் தெற்கு காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், கவச வாகனம் மீது வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் அந்த வாகனத்தில் பயணித்த 7 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை கான் யூனிஸ் பகுதியில் இடம்பெற்றது. இஸ்ரேலின் ராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, 605வது காம்பாட் இன்ஜினியரிங் படையைச் சேர்ந்த வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் பயணித்திருந்த பூமா வகை கவசப் போர்வாகனம் மீது பஸ்தீனிய இயக்கவாதிகள் வெடிகுண்டு பொருத்தியிருந்தனர்.

இந்த கோர விபத்தில் இஸ்ரேலின் ராணுவப் படையினரான, லெப்டினன்ட் மதன் ஷாய் யாஷினோவ்ஸ்கி (21) , ஸ்டாஃப் சார்ஜென்ட் ரோனல் பென்-மோஷே (20) , ஸ்டாஃப் சார்ஜென்ட் நிவ் ராடியா (20), சார்ஜென்ட் ரோனென் ஷாபிரோ (19), சார்ஜென்ட் ஷஹர் மனோவ் (21), சார்ஜென்ட் மாயன் பருச் பேர்ல்ஸ்டீன் (20), ஸ்டாஃப் சார்ஜென்ட் அலோன் டேவிடோவ் (21) உயிரிழந்துள்ளனர்.
எரிந்த CEV வாகனத்திலிருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் இருவரும் சமூக ஊடகத்தில் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்தனர். “போர் கடுமையானது, இழப்புகள் ஆழமானவை. நம் வீரர்களின் தியாகத்தை மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
காஸா பகுதியில் மேலும் நடந்த தாக்குதலில், இரு இஸ்ரேலிய வீரர்கள் RPG தாக்குதலால் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேலின் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலின் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. அந்நாளில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதும், 251 பேர் பிணையிலடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கம், இன்னும் 50 பிணைக் கைதிகளைக் வைத்திருக்கின்றது, அதில் 28 பேர் இறந்துவிட்டதாகவும், 20 பேர் உயிருடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, இதுவரை 56,000 பேர் சண்டைகளில் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனை சரிபார்க்க முடியாது என்றும், பொதுமக்கள் மற்றும் போராளிகள் என வேறுபடுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் இதுவரை 20,000 ஹமாஸ் போராளிகளை கொன்றுள்ளதாகவும், அக்டோபர் 7 தாக்குதலில் 1,600 பயங்கரவாதிகளை நீக்கியதாகவும் தெரிவிக்கின்றது.
இஸ்ரேல், பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஹமாஸ் பொதுமக்கள் பகுதியில் இருந்து தாக்குதல்களை நடத்துவதால் கட்டாயமாக இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வலியுறுத்துகின்றது.



