விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த சம்பவமொன்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவன் காணாமல் போன நிலையில் காட்டுப்பகுதியிலிருந்து கண்டு பிடித்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுவன் வீட்டிற்கு வராத நிலையில் பதற்றமடைந்த ஊர்மக்கள் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்ததுடன் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காட்டுப்பகுதியில் வனபாதுகாப்பு துறையினரால் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ டி.வி காணொளியில் சிறுவன் ஒருவன் காட்டுப்பகுதியில் நடந்து செல்வது பதிவாகியிருந்த நிலையில் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த சிறுவனை கண்டுபிடித்துள்ளனர்.