உறுமய நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் எனவும் சிலர் அதனை குழப்புவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது என கூறியதோடு அவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
20 லட்சம் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 1768 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று(25.06) அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களை பயமுறுத்தும் அதிகாரிகள் குழு பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளன. இந்தக் காணிகளை மீள அரசாங்கம் சுவீகரிக்க முடியும். அதனால் ஏன் இந்த காணி உறுதிப் பத்திரங்களை எடுக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.
ஆனால், உங்களிடம் மீண்டும் ஒருமுறை அதிகாரி யாராவது கேள்வி கேட்டால், அந்த அதிகாரிகள் குறித்த தகவல்களை உங்கள் பிரதேச எம்.பி.க்கு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகளை விசாரித்து உண்மைகளை என்னிடம் தெரிவிக்குமாறு எம்.பி.க்களிடம் கோருகிறேன்.
மேலும் இதுபோன்று செயற்பட்டு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் சில அதிகாரிகளினால் தமது பணியை சிறப்பாக செய்யும் அதிகாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. அதை அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.