January 23, 2026
காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகளை திருடிய காதலி!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகளை திருடிய காதலி!

Nov 26, 2025

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமண தினமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த சில நாட்களாக காதலி காதலனின் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில், கடந்த 5 ஆம் திகதி காதலனின் தாயார் வைத்திருந்த தாலிக்கொடி உட்பட சுமார் 8 பவுண் எடை கொண்ட தங்கநகைகள் காணாமல் போனதாக 17 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான விசாரணைகளில், காதலன் வீட்டில் தங்கியிருந்த யுவதியே நகைகளைத் திருடியமை உறுதிப்படுத்தப்பட்டது. இவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது,

தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும்,மீதமுள்ள நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்றதாகவும்,டிக்டொக் மூலம் தொடர்பான ஒருவரின் ஆலோசனையில் இணையவழி முதலீட்டு மோசடி திட்டத்தில் ஈடுபட்டு இதுவரை 27 இலட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் பணம் சேர்க்க வேண்டிய நிலையிலேயே நகைகளைத் திருடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக இணைய மோசடிகளில் ஈடுபட்டு பலர் சொந்த நகைகளை விற்றும், திருட்டு போனதாக பொய் முறைப்பாடு செய்தும் பல சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, இணையவழி முதலீடுகள், அதிக வருமானம் தருவதாகக் கூறப்படும் திட்டங்கள் போன்ற மோசடிகளிலிருந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *