Tamil News Channel

கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் அதிக விருதுகளை வென்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா..!

21.02.2024_11.48.23_REC

2023 ஆம் ஆண்டிற்கான ESPN cric info இன் (ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ) கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அதிக விருதுகளை பெற்றுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆகியவற்றில் இவ்விரு அணிகளும் மோதியிருந்தன.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 163 ஓட்டங்களைக் குவித்து தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவுஸ்திரேலிய வீரர் ட்ரவிஸ் ஹெட் (Travis Head) அதிசிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் விருதை வென்றெடுத்தார்.

அதிசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பந்துவிச்சாளர் விருதை அவுஸ்திரேலிய வீரர் நேதன் லியோன் (Nathan Lyon) தனதாக்கியிருந்தார்.

அத்துடன், கடந்த வருடம் 17 இன்னிங்ஸ்களில் பந்துவீசிய நேதன் லியோன் 47 விக்கெட்களை வீழ்த்தி 2023இல் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராகவும் காணப்படுகிறார்.

மேலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர் விருது அவுஸ்திரேலிய வீரர் க்ளென் மெக்ஸ்வெலுக்கு (Glenn Maxwell) வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தீர்மானம் மிக்க லீக் போட்டியில் அவுஸ்திரேலியா தடுமாறிக் கொண்டிருந்த போது தனி ஒருவராக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மெக்ஸ்வெல் ஆட்டம் இழக்காமல் 201 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவை அரை இறுதிக்கு இட்டுச் சென்றிருந்தார்.

அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் க்ளன் மெக்ஸ்வெல் (Glenn Maxwell) நிலைநாட்டினார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிசிறந்த பந்துவீச்சாளர் விருது இந்தியாவின் மொஹமத் ஷமிக்கு (Mohammed Shami) கிடைத்தது.

நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் 57 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை ஷமி வீழ்த்தியதன் மூலம் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றிருந்தது.

அத்துடன் கடந்த வருடம் 19 போட்டிகளில் விளையாடிய ஷமி மொத்தமாக 43 விக்கெட்களை ஷமி கைப்பற்றியிருந்தார்.

அதைத் தவிர அதிசிறந்த T20 துடுப்பாட்ட வீரராக இந்தியாவின் சூரியகுமார் யாதவ் (Suriyakumar Yadev) தெரிவாகியிருந்ததோடு, அதிசிறந்த T20 பந்துவீச்சாளராக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப் (Alzari Joshep) தெரிவாகியிருந்தார்.

மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சம்பியன் பட்டங்களைப் பெற்றுக் கொடுத்த அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) அதிசிறந்த அணித் தலைவர் விருதைப் பெற்றார்.

அதிசிறந்த மகளிர் சர்வதேச ஒருநாள் துடுப்பாட்டம் வீராங்கனையாக இலங்கையைச் சேர்ந்த சமரி அத்தப்பத்து (Chamari Attapathu) தெரிவானார்.

மேலும் அதிசிறந்த மகளிர் சர்வதேச ஒருநாள் பந்துவீச்சாளராக பங்களாதேஷ் வீராங்கனை மருஃபா அக்டர் (Marufa Akter) தெரிவானார்.

அதைத் தவிர அதிசிறந்த மகளிர் ரி20 துடுப்பாட்டத்திற்கான விருது மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனை ஹெய்லி மெத்யூஸிற்கும் (Hayley Matthews) அதிசிறந்த மகளிர் ரி20 பந்தவீச்சுக்கான விருது தென்னாபிரிக்க வீராங்கனை அயபொங்க காகாவிற்கும் (Ayabonga Khaka) கிடைத்தது.

மேலும் 2023 ஆம் ஆண்டில் மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் 47 விக்கட்டுக்களை பெற்ற தென்னாபிரிக்க வீரர் ஜெரல்ட் கொட்ஷீ (Gerald Coetzee)அதிசிறந்த அறிமுக வீரர் விருதைப் பெற்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts