கிரேக்கத்துக்குச் சொந்தமான ஜோக்ராஃபியா (Zografia) என்ற கப்பல் வியட்நாமில் இருந்து இஸ்ரேலுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, செங்கடல் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை தாக்கப்பட்டுள்ளது.
இக் கப்பலிற்கு சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது ஹௌத்திகளுக்கு ஈரான் வழங்கிய ஆயுதங்களை கைப்பற்றியதாக அமெரிக்க இராணுவம் அறிவித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதற்கிடையில், யெமனில் ஹௌத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்கா அதிக இலக்குகளை தாக்கியுள்ளது.
ஏவப்படத் தயாராக இருந்த நான்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அழிக்கப்பட்டன என்று அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார்.
செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான ஹௌத்தி குழுவின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜனவரி 11 ஆம் திகதி அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஹௌத்திகளின் பல இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தன.
காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு தாங்கள் பதிலடி கொடுப்பதாக கூறி, ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் நவம்பர் மாதம் முதல் செங்கடலின் ஊடாக செல்லும் வணிகக் கப்பல்களைத் தாக்கத் தொடங்கினர்.