யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பிரதேசத்தில் மருதங்கேணி பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சுற்றிவளைப்பானது மருதங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு குற்றச் செயல்களில் குறிப்பாக வாள் வெட்டு, மிரட்டல் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 40 பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை நேற்று பிற்பகல் குடத்தனை வடக்கு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் மாலை ஆறு மணிமுதல் உற்சவமும் இரவு பத்து மணிமுதல் கச்சேரியும் இடம்பெற்றது.
இவ் வேளையில் மகேந்திரா வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், அதில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்து கச்சேரி நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.